செவ்வாய், 30 டிசம்பர், 2008

தேங்காயும் clutch plate-டும் - II

உறவினர் வீட்டிற்குச் செல்லும் போது செய்ய வேண்டிய சடங்குகளான நலம் விசாரித்தல், சிரித்துப் பேசுதல், குழந்தையைக் கொஞ்சுதல், அன்பளிப்பு அளித்தல், வயிற்றுக்கு ஈதல் முதலியன முடித்துவிட்டு இரவு ஏழேமுக்கால் மணிக்கு பழனியிலிருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டுனர் பாலு ஏனோ அவர்கள் வீட்டில் உணவருந்தவில்லை. திண்டுக்கல் வருவதற்கு சற்று முன்பு அம்மாவிடம் தொலைபேசி நாங்கள் இருக்குமிடத்தைத் தெரிவித்துவிட்டு இரவு பதினோரு மணிக்கு முன்பாக வீடு வந்தடைய வாய்ப்பு இருப்பதாகக் கூறினேன். திண்டுக்கல் நகர எல்லையைத் தாண்டிய பின்பு ஒரு இரவு நேர உணவு விடுதி அருகே தான் சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினார் பாலு. சாப்பிட்டுவிட்டு கிளம்பியபோது நேரம் இரவு 9.30 மணி.

வண்டி ஓட தொடங்கியதும் 'க்வில்ச்' 'க்வில்ச்' என்று சத்தம். நான் அந்த சத்ததில் இருந்த இசையை ரசித்தேன். அது முன்னறிவித்த சங்கடங்களையும் ரசனையுடன் எதிர்பார்த்தேன். பாலு வண்டியின் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் சத்தத்திற்கான காரணத்தை தன் இருக்கையிலுருந்தே கண்டுபிடிக்க முயன்றார். சிறிது நேரத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டு வண்டியை ஓரம்கட்டினார். அம்பாஸிடரின் தொப்பையைத் திறந்து ஏதொ துழாவிவிட்டு "ஃபேன் பெல்ட் லூஸா இருக்குங்க. டைட் பண்ணினா சரியாப்போயிடும்" என்றார். வண்டியினுள் கவலை ரேகைகள் படர்ந்தன.

குறைந்த வேகத்தில், மெக்கானிக் கடை ஏதேனும் தென்படுகிறதா என்று இருபக்கமும் பார்த்துகொன்டே பயனித்தோம். தொடர்ந்து பீதியைக் கிளப்பிக்கொண்டேயிருந்த சத்தம் திடீரென்று நின்றது. இதற்கு சந்தோஷப்பட வேண்டுமா வருத்தப்பட வேண்டுமா என்று ஒருவருக்கும் புரியவில்லை. வண்டியை வேகமெடுத்தார் பாலு. அந்த தெம்பில் வழியில் திறந்திருந்த ஒரு கார் ரிப்பேர் கடையை கண்டும் காணாமல் விட்டுவிட்டேன். பாலுவிடமும் சொல்லவில்லை. அடுத்த பத்தாவது நிமிடம், "க்ளட்ச் வேலை செய்யவில்லை" என்று கூறி பதற்றத்துடன் பெடலை உதைத்தார் பாலு. 'க்ளீஈஈஈஈர்ர்ர்ர்ச்ச்ச்'. வண்டி நின்றுவிட்டது.


நான் சொல்ல விரும்பிய கதை இத்துடன் முடிகிறது. மேற்கொன்டு என்ன நடந்தது என்று அறிய விரும்புகிறவர்களுக்காக 'பிற்சேர்க்கை'யை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக