செவ்வாய், 20 ஜனவரி, 2009

சென்னையில் ஒரு சனிக்கிழமை

பதினேழாம் தேதி, சனிக்கிழமைக் காலை சென்னையை வந்தடைந்தேன். சென்னைக் காற்று பட்டதுமே என் நெஞ்சை சளி ஆட்கொண்டுவிட்டது. மின்சார ரயில் மூலம் கிரோம்பேட்டை சென்று, நண்பனின் வீட்டில் காலைக் கடன்கள், சிற்றுண்டி எல்லாம் முடித்து, மீண்டும் மின்சார ரயிலில் கேத்துப்பட்டு வந்து சேர்ந்தபோது மணி பதினொன்று.

பெங்களூருவில் வெயிலின் நிழல் கூட அண்டாமல் இருந்த என்னை, சென்னை வெயில் பாடாய்ப்படுத்தியது. கூடவே சளி வேறு வற்றா நதி போல ஓயாமல் ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. வியர்வை சளி என்ற இரண்டு கழிவுநீர்க்குழாய்களில் முங்கியதால் சொதசொதவென்றிருந்த கைக்குட்டை மேலும் எரிச்சலூட்டியது. உடலில் இருந்த சக்திஎல்லாம் தீர்ந்துபோய் மயக்கம் வரும்போலிருந்தது.

இருப்பினும் அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்த வேலை தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு துணிக்கடையைத் தேடி இரண்டு புதிய கைக்குட்டைகளும், ஒரு மளிகைக்கடையில் நான்கைந்து பாளங்கள் மிட்டாயும் வாங்கிக்கொண்டேன். மிட்டாய் சாப்பிட்டதும் உடலில் கொஞ்சம் தெம்பு வந்தது. முகத்திற்கும் மூக்கிற்கும் தனித்தனிக் கைக்குட்டைகளைப் பயன்படுதியதால் மனதிலும் முகத்திலும் சற்றுப் புத்துணர்வு ஏற்பட்டிருந்தது.

இந்த ஏற்பாடெல்லாம் செய்துவிட்டு, புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தபோது மணி பதினொன்றரை. சுமார் 12 வரிசைகளில் கிட்டத்தட்ட 500 காட்சியறைகள் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். முதல் இரண்டு காட்சியறைகளில் மட்டும் கூட்டம் நெருக்கியடித்தது. ஆர்வத்துடன் கண்காட்சிக்கு வருபவர்கள் இந்த இரண்டு அறைகளைப் பார்த்து முடித்ததுமே ஆர்வம் குன்றி, மற்ற காட்சியறைகளை வெளியில் இருந்தே பார்க்க முடிவு செய்து விடுகிறார்கள் போலும்!

கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த அறைகளைத் தவிர்த்துவிட்டு மூன்றாவது அறையிலிருந்து என் உலாவைத் துவக்கினேன். என்னைக் கவர்ந்த புத்தகங்களை மனதில் குறித்துகொண்டே நடந்தேன். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு பதிப்பாளருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. கல்கியின் படைப்புகள் அநேகமாக எல்லா அறைகளிலுமே இருந்தன. இரண்டாவது வரிசையில் முதலாவதாக கலைஞரின் படைப்புகளுக்கான அறை. ஊழியர்களைத் தவிர ஒருவரும் அதனருகில் கூட செல்லவில்லை!

"இந்தாண்ட போய்னிருந்தேன். புக் எக்ஸிபிசன் போட்ருக்காங்களே, பாத்துனு போலாமேன்னு வந்தேம்பா. சூப்பரா கீது. நீயும் வ்ந்து பாரு." "...." "பூந்தமல்லி ரோட்ல. பச்சியப்பாஸாண்ட" "...." "உள்ள நெர்யா புக்ஸ் வச்சிருக்காங்க. நல்லாருக்கு. உன்கு எதுனா யூஸ்ஃபுல்லாருக்குமேன்னு சொன்னேன்." "....". "நாளியோட லாஸ்டு" "....". "அப்டியா...சரி விடு. நா பாத்துட்டு வர்றேன்." - அனைத்துத் தரப்பினரையும் புத்தகக்கண்காட்சி கவர்ந்திருப்பது கண்டு வியந்தேன்.

மாலை ஐந்து மணிவரை ஓய்வின்றி சுற்றியதில் பாதியளவு கடைகளை மட்டுமே காண முடிந்தது. கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரத்தில் உட்கொண்ட உணவு இரண்டு உருளைக்கிழங்கு போண்டாக்களும் ஒரு பொட்டலம் வறுகடலையும் மட்டுமே. காலையில் இருந்த நிலையை நினைத்து பார்த்தால், அவ்வளவு நேரம் தாக்குப்பிடித்தது ஆச்சர்யம்தான்.

மொத்ததில் என் விருப்பத்தில் வாங்கிய புத்தகம் ஒன்றே ஒன்றுதான் - நன்னன் எழுதிய 'நல்ல உரைநடை எழுத வேண்டுமா?' மனைவிக்கு நான்கைந்து சமையல் புத்தகங்கள் மற்றும் ஒரு பன்னாட்டுச் சிறுகதைத் தொகுப்பு, தாயாருக்கு சாண்டில்யனின் 'ராஜமுத்திரை' மற்றும் லக்ஷ்மியின் 'பண்ணையார் மகள்', நண்பர் ஒருவருக்கு பரிசளிக்க அப்துல் கலாமின் 'அக்னிச் சிறகுகள்' - இவைதான் அன்று நான் வாங்கிய புத்தகங்கள்.

"நாடுவிட்டு நாடு வந்த தமிழர்களுக்கு இருக்க இடம் தந்ததால், இன்று முதல் நீ நாடோடிக்கு வீடளித்த புலிகேசி என்றழைக்கப்படுவாய்" - நண்பனுக்கு நான் அளித்த வாழ்த்திற்கு பதிலாக டப்பாவில் சப்பாத்தி வைத்துக் கொடுத்தான், இரவில் ரயிலில் சாப்பிடுவதற்கு. அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரயில் தூக்கத்திற்குத் தயாரானேன். சென்னையில் சனிக்கிழமை இனிதே கழிந்தது.

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

பயணங்கள் முடிவதில்லை...

கடந்த வாரம் சற்று அதிகமாக பயணத்தில் ஈடுபட்டிருந்ததால் எழுத முடியவில்லை. கிட்டத்தட்ட அரசியல்வாதிகளின் சூறாவளிச் சுற்றுப்பயணம் போல் இருந்தது எனது கடந்த வார பயண நிரல்.

09-01-2009, வெள்ளிக்கிழமை இரவு - பெங்களூரு-திருச்சி

11-01-2009, ஞாயிற்றுக்கிழமை இரவு - திருச்சி-பெங்களூரு

13-01-2009, செவ்வாய்க்கிழமை இரவு - பெங்களூரு-திருச்சி (பிறந்த வீட்டில்தான்* தலைப்பொங்கல் கொண்டாட வேண்டுமாம்)

14-01-2009, புதன்கிழமை மதியம் - திருச்சி- பொள்ளாச்சி# (புகுந்த வீட்டில்* மாட்டுப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கமாம்)

15-01-2009, வியாழக்கிழமை இரவு - பொள்ளாச்சி- பெங்களூரு

16-01-2009, வெள்ளிக்கிழமை இரவு - பெங்களூரு- சென்னை (புத்தகக் கண்காட்சி காண)

17-01-2009, சனிக்கிழமை இரவு - பெங்களூரு- சென்னை

* மாப்பிள்ளையாகிய நான் பிறந்தது, புகுந்தது

#வழியில் கார் ('car' போன்ற வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து) சக்கரம் பழுதடைந்தது. உபரிச் சக்கரத்தை மாற்றிக்கொண்டு சென்றோம். அருகில் இருந்த பணிமனையில் சென்று பார்த்தபோது சக்கரத்தின் குழாய் கிழிந்திருப்பது தெரிந்தது. அனைத்து கடைகளும் பொங்கல் விடுமுறைக்காக மூடியிருந்ததால் புதிய குழாய் கிடைக்கவில்லை. அந்த பணிமனையிலேயே நல்ல நிலையில் இருந்த ஒரு பழைய குழாயை மாற்றிக்கொண்டு சென்றோம்.

முந்தைய பயணங்கள் போல இம்முறை புகைப்படத் தருணங்கள் அதிகம் இல்லை. நினைவுப் படிமங்கள் தாம். அவற்றை அவ்வப்போது எழுதுகிறேன்.

பொதுவாக பயணப்பொழுதுகளை அந்த சமயத்தில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்பாடல்களைக் கேட்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், நல்ல பாடல்களை ரசிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்வேன். ஆனால் இந்த முறை என் பயனத்திற்கு துணை வந்தவர்கள் எஸ்.வீ.சேகரும், கிரேசி மோகனும். http://www.maheshwaran.com/ -ல் அவர்களது பல நாடகங்களுக்கான 'Rapidshare' தளமுகவரி தருகிறார்கள். (இவற்றை தரவிறக்கம் செய்து கேட்பது சட்டவிரோதமானது. நான் இதைப் பரிந்துரைக்கவில்லை :D ).

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரயில் பயணம். தொட்டிலில் தூங்கியபோது கிடைத்த சுகம் இப்போது நம் நினைவில் இருக்காது. ஆனால் அதே உணர்வைத் தருகிறது ரயில் தூக்கம். மென்மையான தாலாட்டு. சீரான இடைவெளிகளில் நிறுத்தம். இரைச்சல் போல தெரிந்தாலும், லயத்துடன் கூடிய இசை. இறங்க வேண்டிய இடம் வரும்போது யாரும் எழுப்பாமல் தானாகவே தூக்கம் கலைதல். பல நாட்களுக்குப் பின் இந்த சுகத்தை மீண்டும் அனுபவித்தேன்!

இந்த பயணங்களில் நான் சென்ற இடங்களில் நடந்தவைகளை அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.