புதன், 7 ஜனவரி, 2009

புதுமைப்பித்தன்!

http://www.chennailibrary.com/ - கல்கி, அண்ணா, புதுமைப்பித்தன் போன்ற முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இத்தளத்தில் படிக்க கிடைக்கின்றன. சங்க இலக்கியங்கள் மற்றும் வேறு சில இலக்கிய நூல்களும்கூட உள்ளன.

இத்தளதில் உள்ள உரைநடை நூல்கள் அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் படித்து முடித்துவிட வேண்டும் என்பது 2008-ன் தொடக்கத்தில் நான் மேற்கொண்ட உறுதிமொழி. இன்றுவரை (08-Jan-2009) புதுமைப்பித்தனின் 75 சிறுகதைகள், கல்கியின் ஒரு நாவல், அண்ணாவின் ஒரு நாவலில் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்து முடித்துள்ளேன். இந்த ஆண்டு எப்படியும் முடித்துவிட வேண்டும்.

இன்று புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றைப் படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு துணைப்பாடத்தில் படித்த அவருடைய ஒரு கதையின் காரணமாக அவர் மீது எனக்கு அப்படி ஒன்றும் உயர்ந்த எண்ணம் இருக்கவில்லை. அவருடைய எண்ணற்ற அற்புதமான படைப்புகளிலிருந்து அப்படி ஒரு கதையை மாணவர்களுக்காக தேர்ந்தெடுப்பதற்கு தனித்திறமை வேண்டும்.

ஓரிரு வருடங்களுக்கு முன் ஒரு நண்பன் மூலம் அவர் கதைகளின் சிறப்பை தெரிந்துகொண்டது முதல் அவற்றைப் படிக்க எனக்கு ஆவல் ஏற்பட்டிருந்தது. அன்று முதல் இன்று வரை அவரது ஒவ்வொரு கதையும் என்னை வியப்பின் மேல் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. (தலைப்பில் உள்ள ஆச்சர்யக்குறியின் காரணம் அதுதான்!).

1930-தைச் சுற்றியுள்ள காலங்களில் எழுதப்பட்ட கதைகளில் அவை. அவற்றில் உள்ள சில கருத்துக்கள், உண்மையிலேயே அவர் அப்போது எழுதியவைதானா அல்லது தற்போதைய சமூக நிலைக்கு ஏற்றவாறு எவராலோ திருத்தப்பட்டவையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவிற்கு காலத்தை வென்று நிற்கும் படைப்புகள் அவை!

நல்ல கலை ரசிகர்களுக்கு அவரது படைப்புகள் ஒரு இன்ப விருந்து! உங்கள் ஆர்வத்தை தூண்டும் நோக்கத்துடன் இன்று படித்த ஒரு கதையில் இருந்து சில வரிகளுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

"பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்."


"தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக