சனி, 7 பிப்ரவரி, 2009

நான் கடவுள்

பாலாவின் பட்டறையிலிருந்து மற்றுமொரு உள்ளத்தை உலுக்கும் படம். கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. எடுத்துரைக்கப்படும் கருத்துக்களையும் நிஜங்களையும் கோர்ப்பதற்கு ஒரு நூலாகவே கதை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உக்கிரமான சிரசாசனம், கோபப்பார்வை, ஆவேச நடை, துஷ்டர்களை வெறியுடன் வேட்டையாடல், எல்லோரிடமும் அலட்சியம்- படத்தில் ஆர்யா செய்தவை இவ்வளவுதான்.

சாக்கடைச் சகதியில் கிடக்கும் கண்ணாடித் துண்டு சூரிய ஒளி பட்டு ஜொலிப்பது போல அந்த கோரமான கதைக்களத்தில் தன் நடிப்பின் மூலம் அற்புதமாக ஜொலித்திருக்கிறார் பூஜா. தேசிய விருது பெறுவது நிச்சயம் என்று அவருக்கே தெரிந்திருக்கும். அதற்கான பயணச்சீட்டைக் கண்டிப்பாக முன்பதிவு செய்திருப்பார். தமிழ்ப்படத்தில் நாயகிக்கு இப்படி ஒரு கனமான பாத்திரம் அளிக்கப்பட்டிருப்பதும், முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை இப்படி ஒரு பாத்திரத்தில் லயித்து நடித்திருப்பதும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.

படத்தின் துவக்கத்தில் பிச்சைக்காரர்களை சிறைபடுத்தி இருக்கும் இடத்தில் காட்டப்படும் காட்சிகள் எப்பேர்பட்ட கல்நெஞ்சக்காரர்களையும் கரைத்துவிடும் வலிமையான காட்சிகளாக அமைந்துள்ளன.

இவை அனைத்தையும் விட காண்போரின் உள்ளத்தில் ஆட்சி செய்வது பின்னணி இசை. குப்பைமேட்டு கோடீஸ்வரன் படத்தில் சர்வதேச விருது கொடுக்கப்பட்ட அந்த இசையில் உள்ள பெருமையை என்னால் உணர முடியவில்லை. ஆனால் இந்த படத்தில், காட்சியில் உள்ள உக்கிரத்தையும், சோகத்தையும், நகைச்சுவையையும் இன்னபிற விவரிக்க முடியாத உணர்ச்சிகளையும் உடலிலும் உள்ளத்திலும் ஊர்வலம் அழைத்துச் செல்கிறது இளையராஜாவின் பின்னணி இசை. என் போன்ற பாமரனும் ரசிக்ககூடிய வகையில், இன்றும் பின்னணி இசையின் மன்னனாக திகழும் மேதைக்கு முன்னே ஆஸ்கர் விருது எல்லாம் சிறுவர் விளையாட்டிற்குச் சமானம்.

பாசமலர் திரைப்படம் வெளிவந்த போது அதைப்பார்த்த மக்கள் திரையரங்குகளிலேயே கண்ணீர் சிந்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு திரைப்படம் எப்படி அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அந்த செய்தியை முழுமையாக நம்பியதில்லை. ஆனால் இன்று அரங்கில் 'அய்யோ' 'அம்மா' என்று உணர்ச்சிவசப்பட்டு மக்கள் அரற்றிய போது அதில் இருக்கும் உண்மையை உணர்ந்தேன்.

3 கருத்துகள்:

  1. பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. திருத்திவிட்டேன். தவறில்லாமல் எழுதுவதற்கு பெருமுயற்சி செய்கிறேன். அதையும் மீறி சில தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. இனி சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறேன். நன்னனிடமும் தங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் மேலான விமர்சனங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு