புதன், 4 பிப்ரவரி, 2009

மீண்டும் ஒரு தடைபட்ட பயணம்!

நான் பயனம் செய்யும் வண்டிகளுக்கு என் மீது அபார பிரேமை போலிருக்கிறது. ஏதாவது பழுதை உண்டாக்கிக் கொண்டு நான் அதனுடனேயே அதிக நேரம் கழிக்க வழி செய்துகொள்கிறது.

இந்த முறை பெங்களூருவிலிருந்து திருச்சி சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்து. முன்பு போலவே 'clutch' கோளாறு. இரவு சுமார் ஒன்றரை மணிக்கு தருமபுரி அரசு பணிமனையில் வண்டியை நிறுத்தினார்கள். அரசு பணிமனையில் ஊழியர்களைத் தவிர வேறு ஒருவரும் நுழையக்கூடாதாம். அதனால் பேருந்தில் இருந்தவர்களை பேருந்தை விட்டு இறங்க விடவில்லை. பேருந்திலிருந்தே கைபேசி மூலம் எடுத்ததால் புகைப்படங்கள் தெளிவாக இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

இந்த கட்டுரைக்கு 'Pitstop' என்றுதான் தலைப்பு கொடுக்க எண்ணினேன். ஆனால் நன்னன் அவர்கள் என் கண்முன்னே தோன்றி தூய தமிழ்க் கெட்ட வார்தைகளால் திட்டியதால் தலைப்பை மாற்றிவிட்டேன். வாகனங்களை பழுது பார்ப்பதை '' என்று ஏன் சொல்கிறார்கள் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஒரு பள்ளமான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சக்கரங்களுக்கு இடையேயான நடுப்பகுதி அந்த பள்ளத்திற்கு மேல் வருமாறு வாகனத்தை நிறுத்துகிறார்கள். வண்டிக்கு அடியில் படுத்துக்கொண்டு சிரமப்பட்டு வேலை செய்ய அவசியமில்லை. பள்ளத்தில் தாராளமாக நின்றுகொண்டு சுலபமாக வேலையைச் செய்யலாம்.
பழுது குழியை நோக்கி செல்கிறது எங்கள் பேருந்து
சோர்வுடன் எங்கள் ஓட்டுநர்
ஓட்டுநர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான இலக்கு

மூன்று மணி நேரம் முயன்றும் முழுதாக சரிசெய்ய முடியவில்லை. அங்கிருந்து தட்டுத்தடுமாறி கிளம்பி, திக்கித்திணறி ஊர்ந்து சென்று தருமபுரியிலிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் முற்றிலுமாக நின்றுவிட்டது. அதற்குள் மணியும் அதிகாலை அய்ந்தரை (சொற்பிரயோகம்: நன்றி நன்னன்) ஆகிவிட்டிருந்தது. ஒரு சிறுதூர பேருந்து மூலம் அங்கிருந்து சேலத்திற்கு வந்து, பின்னர் மற்றொரு பேருந்து பிடித்து திருச்சி வந்தடைந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக