கம்பராமாயணம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். அதன் சுவை அனைவரும் அறிந்ததே. கதைக்குள் புகுமுன்பே, கடவுள் வாழ்த்திலேயே அற்புதமான செய்யுள் ஒன்றைப் படித்தவுடன் அதன் சுவையைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பால காண்டத்தின் முதல் படலமான ஆற்றுப்படலத்தில் காப்புப் பகுதியில் அனுமனைத் துதிக்கும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்.
இங்கு 'அஞ்சு' என்பது நீர், நெருப்பு, ஆகாயம், நிலம், காற்று ஆகிய ஐம்பூதங்களைக் குறிக்கின்றது. 'அஞ்சிலே ஒன்று' என்று ஒவ்வொரு முறை வரும்போதும் இவற்றில் ஒவ்வொன்றை சுட்டுகின்றது.
அனுமன் வாயுவின் மகன்; சீதை பூமித்தாயின் மகள்; இராமனின் ஆருயிரான சீதையைக் காண அனுமன் ஆகாயத்தில் ஏறி கடல் மீதுத் தாவிச் செல்கிறான். அயல்நாடான இலங்கையில் தீ வைக்கிறான்.
இந்தக் கருத்துக்களை எத்துனைச் சுவையாகத் தொகுத்திருக்கிறார் கம்பர். அவரது சிந்தனையை எண்ணி எண்ணி வியக்கிறேன். நூலின் உள்ளே இன்னும் எத்தனை எத்தனை இன்பச் சுளைகள் காத்திருக்கின்றன என்று எண்ணி ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புடன் பூரிக்கிறேன். கம்பராமாயணத்தில் நான் காணும் சுவைகளனைத்தையும் வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.