ரவி சாஸ்த்ரி
'அபியும் நானும்' பார்த்தவர்களுக்கு நான் யாரைப் பற்றிக் கூறுகிறேன் என்று தெரியும். அந்த பாத்திரத்தில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வந்த படங்களில் கிட்டத்தட்ட அனைத்திலும் (மட்டும்?) நடித்துள்ளார். வேறு ஒருவரும் வாய்ப்பு தரவில்லையோ என்னவோ. அவற்றில் நன்றாகத்தான் நடித்திருந்தார். நன்றாக நடிப்பதாக எண்ணிக்கொண்டு overact செய்வதை கிண்டலடிக்கும் 'வெள்ளித்திரை'யிலும் நடித்திருந்தார். 'அபியும் நானும்' படத்தில் இவரது நடிப்பு சிறப்பாகவே தெரிந்தாலும், தேவைக்கும் சற்று அதிகமாகவே உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது போல தோன்றுகிறது. 'நான் நன்றாக நடிப்பேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள்', என்று கேட்பது போல் இருக்கிறது.
இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனந்த விகடனில் இவரைப்பற்றி ஒரு துணுக்கை படிக்கும் வரையில். இவரது பெயர் குமரவேல். நாடகத்துறையில் அதிக ஈடுபாடு உள்ள ஒரு சிறந்த நாடகக்கலைஞர். நாடகத்துறை தொடர்பான வேலைகளில் அதிகமாக ஈடுபட்டிருப்பதுதான் திரைப்படங்களில் அதிகமாக நடிக்காததற்கு காரணம் என்று தெரிந்துகொண்டேன்.
தாமரை
மற்றொரு அரைவேக்காட்டு எண்ணம் கவிஞர் தாமரை பற்றி ஏற்பட்டிருந்தது. 'வாரணம் ஆயிரம்' படத்தில் அனைத்து பாடல்களும் அவர்தான் எழுதினார் என்று நினைத்திருந்தேன். 'ஏத்தி ஏத்தி' பாடலில் ஆங்கில சொற்கள் கலந்திருப்பதைக் கண்டு, தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்துவது என்ற அவரது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார் என்று எண்ணியிருந்தேன். அதை உறுதிபடுத்தக்கொள்ள முயற்சிகூட செய்யவில்லை நான். அந்த பாடலை எழுதியது அவர் இல்லை, நா.முத்துக்குமார் என்பதைத் தற்செயலாகத்தான் அறிந்தேன். அதை அறிந்தபோது, கவிஞரின் கொள்கை உறுதியை எண்ணிப் பெருமைப்பட்டதோடு, அவரைப்பற்றி தவறாக எண்ணியதற்காக வெட்கப்பட்டேன்.
சங்கு கருப்பாகத் தெரிந்தால், கோளாறு காண்பவரின் பார்வையில்தான். ஏனென்றால், சங்குசுட்டாலும் வெண்மை தரும்.