பொள்ளாச்சி. மாலை 4 மணி. திருச்சியை நோக்கி கிளம்பியது எங்கள் கார். காரில் என் மனைவி, மாமனார், மாமியார், அவர்களது ஆஸ்தான ஓட்டுனர் பாலு மற்றும் நான். நாங்கள் கிளம்பிய தகவலை திருச்சியிலிருக்கும் என் அம்மாவிடம் கைப்பேசி மூலம் தெரிவித்தேன்.
"எத்தனை மணிக்கு வருவீங்க?"
பொதுவாக பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வர அதிகபட்சம் ஐந்து மணி நேரம் ஆகும். ஓட்டுனரையும் காரையும் கிண்டல் செய்யும் எண்ணத்தில், "நைட் 2 மணி" என்றேன்.
வெளியூர் பயணம் செல்லும் போது கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புவது அவர்கள் வீட்டில் வழக்கம். கருப்பண்ணசாமி கோவில் முன் வண்டி நின்றது. மாமனார் ஒரு தேங்காயால் கோவிலின் முன் செங்குத்தாக ஒரு வட்டம் வரைந்தார். பின் தரையை நோக்கி வேகமாக வீசினார். தேங்காய் உடையவில்லை. உருண்டு ஓடியது. "விடாதீங்க! உடைச்சிட்டு போங்க! அப்படியே விட்டுச்சென்றால் ஆகாது" சுற்றி இருந்த கடைக்காரர்கள் போதித்தார்கள். பாலு தேங்காயை துரத்தி சென்று கையில் எடுத்து ஒரு போடு போட்டார். மீண்டும் தப்பித்துக்கொண்டது. "குடுமியைப் பிய்த்துவிட்டுப் போட்டால்தான் உடையும்", தன் கணவருக்கு என் மாமியாரின் அட்வைஸ். மூன்றாவது முயற்சியில் சிதறின சில்லுகள்.
போகும் வழியில் பழனியில், என் அண்ணனுக்கு (பெரியம்மா மகன்) பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டுப் போவதாக திட்டம். குழந்தைக்கு துணி வாங்குவதற்காக உடுமலையில் நாங்கள் சென்ற கடையில்ஒரு சுவரஸ்யமான தள்ளுபடி திட்டம். வாடிக்கையாளர்களைக் கவர கற்பனைக்கும் எட்டாத பலவித திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்தக்கடையில் கடற்கரையில் சுடுவதற்காக வைத்திருப்பதைப்போல் பலூன்களைக்கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உடைக்கவேண்டுமாம். உள்ளே உள்ள கூப்பனுக்கு ஏற்றவாறு தள்ளுபடி தருவார்களாம். பலூனை உடைக்க ஒவ்வொரு பலூனின் மூக்கனாங்கயிற்றிலும் ஒரு ஊசியையும் கட்டி வைத்திருந்தார்கள். நான் ஒரு நீல நிற பலூனை எடுத்து வெடித்ததில், 5% என்று வந்தது. "5% பணம் தந்தால் போதுமா?" என்று கேட்டேன். "5% டிஸ்கௌண்ட் சார்" என்றார்கள்.
தொடரும்...